FRDI Bill 2017 - சர்ச்சையும் உண்மையும்

(கொஞ்சம் நீண்ட கட்டுரை பொறுமையுடன் படிக்கவும்)

1991 க்கு முன்பு வரை பெரிய தொழில்கள், வங்கிகள் எல்லாம் அரசாங்கத்தின் வசம்தான் இருந்தது. 1991 உலகமயமாக்கலுக்கு பிறகு சோப்பு தயாரிப்பு முதல் ISRO வின் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிப்பு வரை அனைத்திலும் தனியார் பங்களிப்பு அனுமதிக்கப்பட்டுவிட்டது.

உற்பத்தி நிறுவனங்கள் விபத்து, போட்டிநிறுவனங்களிடம் சந்தை இழப்பு (உதாரணமாக RCom, Tata Docomo) , சந்தையின் தேவைக்கு ஏற்ப புதுப்பித்து கொள்ளாமை (அம்பாசடர் கார் ஜாம்பவான் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்), ஊழல் புகார் (சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம்), அலட்சியம் (BSNL) போன்ற ஏதேனும் காரணத்தால் தொழில் நொடித்து போகலாம். நொடித்து போகும் அல்லது திவாலாகும் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாவிட்டால் வங்கிகள் அந்த கடனை வாரா கடன்  (Bad Loans/ Non Performing Asset) என்று அறிவிக்கின்றன.

இப்படி வங்கிகளுக்கு வரவேண்டிய வாராக்கடன் அளவு மட்டும் சுமார் 10 லட்சம் கோடி ரூபாய்.  இந்த வாரக்கடனை தொகையை வசூல் செய்ய மத்திய அரசு கொண்டுவந்ததே IBC எனப்படும் Insolvency & Bankruptcy code அல்லது திவால் சட்டம். இதனை பயன்படுத்தி RBI மோசமான கடன்களை வாராக்கடன் என அறிவித்து அந்த நிறுவனத்தின் மீது திவாலுக்கான நடவடிக்கைகளை தொடங்கலாம். இது வாராக்கடன் பிரச்சனையில் இருந்து வங்கிகளை மீட்டெடுக்க பெரிய அளவில் உதவும்.

சரி உற்பத்தி துறையில் இருக்கும் நிறுவனம் திவால் ஆனால் IBC சட்டம் இருக்கிறது, உற்பத்தி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனம் திவால் ஆனால் அவர்களை யார் காப்பாற்றுவது ?

FRDI Bill 2017

இன்னும் விளக்கி சொல்லவேண்டும் என்றால், வங்கிகள் தனது வாடிக்கையாளரிடம் வாங்கிய பணத்தை தான் இன்னொருவருக்கு கல்விக்கடனாகவோ, தொழில், நகை அல்லது விவசாய கடனாகவோ தருகின்றன. ஒரு வேலை கடன் கொடுத்த தொகை வசூல் ஆகாத பொழுது (வாரா கடன், விவசாய கடன் தள்ளுபடி போன்ற காரணத்தால்) வங்கிகளால் தங்களிடம் பணம் போட்ட வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாமல் போகலாம். அப்படி ஒரு நிலையில் வங்கி திவால் ஆகிவிட்டது என்று அர்த்தம்.

அச்சச்சோ !!! அப்ப நம்ம டெபாசிட் பண்ண பணம் அவ்ளோதானா ??

இருங்க ஒரு நிமிஷம் ! இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்னரே கணித்த பொருளாதார மேதைகள் Insurance and Credit Guarantee Corporation Act, 1961 என்ற சட்டத்தை இயற்றினார்கள். இதன் படி வங்கியில் தொடங்கப்படும் அனைத்து டெபாசிட் கணக்குகளும் Deposit Insurance and Credit Guarantee Corporation (RBI யின் துணை நிறுவனம்) என்ற நிறுவனத்தில் 1 லட்ச ரூபாய்க்கு காப்பீடு (insure) செய்யப்பட்டுள்ளது.

நாம் bike இன்சூரன்ஸ் போடுவது போலத்தான். நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உங்கள் பைக்கை இன்சூர் செய்வீர்கள். அந்த  இன்சூரன்ஸ் பாலிசிக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை பிரீமியமாக  செலுத்திவரவேண்டும்  ஏதெனும் அசாதாரண நிகழ்வு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் நிறுவனம் இன்சூரன்ஸ் தொகையை நமக்கு வழங்கும் (கவனிக்க பைக் வாங்கிய விலை அல்ல முன்னமே ஒப்புக்கொண்ட இன்சூரன்ஸ் தொகைதான்)

நமது வங்கி டெபாசிட் கணக்கு அனைத்தும் 1லட்ச ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று முன்னமே குறிப்பிட்டேன். அந்த 1 லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் பாலிசிக்கு வங்கிகள் வருடாவருடம் 100 ரூபாயை ப்ரீமியமாக செலுத்தி வருகின்றன. ஒரு வேலை வங்கிகள் திவால் ஆனால் டெபாசிட் தொகையில் 1 லட்ச ரூபாயை Deposit Insurance and Credit Guarantee Corporation நிறுவனம் திருப்பி வழங்கிவிடும். அப்ப 10 லட்ச ரூபாய் வச்சுருக்க account க்கு என்று நீங்கள் கேட்டால் sorry அதற்கும் 1 லட்ச ரூபாய் தான் கிடைக்கும்.

இப்பொழுது விகடன் போன்ற செய்தி நிறுவனங்கள் கிளப்பிவிட்ட வதந்தி வீடியோ எல்லாம் உண்மை என்று தோன்றுகிறதா ?

இருங்க பாஸ் !

ஒரு வங்கி திவாலானால் அதை அப்படியே கைகழுவி விட்டுவிட்டு அதில் டெபாசிட் செய்தவர்களுக்கு வெறும் 1 லட்ச ரூபாய் மட்டும் கொடுத்து எல்லாம் அனுப்பிவிடமாட்டார்கள்.

நிறுவனம் திவாலானால் அரசாங்கம் அதை காப்பாற்ற இரண்டு விதமாக முயற்சி செய்யலாம் ஒன்று Bail Out மற்றொன்று Bail In.

* வங்கி நடத்த பணமில்லாமல் திவாலாகப்போகிறது என்றால் அரசாங்கம் களத்தில் இறங்கி அந்த வங்கியில் புதிதாக முதலீடு செய்து (Re Capitalisation) வங்கியை தொடர்ந்து நடத்த உதவுவது Bail Out.

 * அரசாங்கம் வெளியே இருந்து பணத்தை போடாமல் திவாலாகப்போகும் வங்கியின் சொத்துக்களை விற்றோ, கடன்களை பங்குகளாக மாற்றியே (dept to equity), வாடிக்கையாளர் வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்தை பயன்படுத்தியோ நிறுவனத்தை மீட்டு தொடர்ந்து நடத்த முயன்றால் அதற்கு பெயர் Bail In என்று சொல்வார்கள்.

எளிமையாக சொன்னால் நிறுவனத்திற்கு வெளியேயிருந்து பணம் கொடுத்து காப்பாற்ற முயன்றால் அதற்கு பெயர் Bail Out, உள்ளே இருக்கும் சொத்துக்கள், டெபாசிட் தொகை கொண்டு காப்பற்ற முற்பட்டால் அதற்கு பெயர் Bail In. இப்பொழுது FRDI சட்ட வடிவில் இருக்கும் Bail In என்கிற பகுதி தான் சர்ச்சையின் நாயனாக மீடியாக்களில் வலம்வருகிறது.

FRDI சட்டம் நடைமுறை படுத்தப்பட்ட பின்

* இதற்கு முன் வங்கிகளின் டெபாசிட் தொகையை காப்பீடு செய்யும் பொறுப்பு RBI யின் Deposit Insurance and Credit Guarantee Corporation நிறுவனத்திடமிருந்து RC என்ற Resolution Corporation நிறுவனத்திற்கு மாற்றப்படும் (இதனால் வாடிக்கையாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை)

* நமது டெபாசிட் தொகைக்கு செய்யப்பட்டுள்ள இன்சூரன்ஸ் தொகையை 1 லட்ச ரூபாயிலிருந்து இரண்டு அல்லது மூன்று லட்ச ரூபாயாக உயர்த்த அரசு விரும்புகிறது. இறுதி முடிவு எட்டப்படவில்லை ஆனால் கண்டிப்பாக பழைய 1 லட்ச ரூபாயை விட அதிக தொகைதான் என்பது உறுதியாகிவிட்டது. (கவனிக்க இது வாடிக்கையாளரான நமக்கு சாதகமே)

* என்னப்பா 50 லட்சம் டெபாசிட் பன்னிருக்கேன். போட்ட வங்கி திவாலானா வெறும் 1 லட்சம் இல்லாட்டி 3 லட்சம் தான தருவீங்களா என்றால் ஆம் உண்மைதான் ஆனால் இது புதிது இல்லை 1961 முதல் இதுதான் நடைமுறை. வங்கியில் பணம் போட்டால் கண்டிப்பாக திரும்பி வரும் என்று எந்த guarantee யும் வங்கிகள் நமக்கு 1961 முதலே தரவில்லை. இதுவரை வங்கிகள் திவால் இந்தியாவில் நடைபெறவே இல்லை என்பதால் நமக்கு இப்படி ஒரு உள்குத்து இருப்பதே தெரியவில்லை.

எப்பொழுதெல்லாம் வங்கிகள் மோசமான நிலைக்கு செல்கின்றனவோ அப்பொழுது அரசாங்கம் தானாக முன்வந்து டெபாசிட் செய்தவர்களை காப்பாற்றிவருகிறது, இனியும் காப்பாற்றும். சமீபத்திய bank recapitalisation, வங்கிகள் இணைப்பு (merger) எல்லாம் டெபாசிட் செய்த வாடிக்கையாளரை காப்பாற்றத்தான். ஏதோ FRDI 2017 சட்டத்தில் தான் எல்லாம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது போல் மீடியாக்கள் கத்துவதெல்லாம் சும்மா அரசியல் பிழைப்பிற்காகத்தான்.

FRDI பில் பற்றி மேலும் விரிவாக படிக்க

http://www.livemint.com/Opinion/WHC48EQMgIucC8ve5d38FM/FRDI-Bill-is-not-going-to-hike-the-risk-to-your-deposits.html

http://www.businesstoday.in/sectors/banks/banks-higher-deposit-insurance-cost-frdi-bill-bail-in/story/265797.html

http://indianexpress.com/article/explained/frdi-bill-understanding-the-basis-of-bail-in-and-depositors-fear-4977004/ 

Comments

Popular posts from this blog

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

Download Tamil books free in PDF format - Project Madurai

சங்கதாரா புத்தக விமர்சனம்

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)

குட்டி தகவல்: "பிங்க் சிட்டி" ஜெய்ப்பூர் - பெயர் வந்த கதை