எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)
வாதாபி கணபதியின் கதை :
பல்லவர்களுக்கும் (காஞ்சியை தலைமையிடமாக கொண்ட தமிழ் மன்னர்கள்) சாளுக்கிய மன்னனா புலிகேசிக்கும் (கர்நாடக மன்னர்கள்) கி.பி 642ல் சாளுக்கிய தலைநகரான வாதாபியில் போர் நடைபெற்றது.மூலம் : Google தளம் |
பல்லவர்கள் படைக்கு பரஞ்ஜோதி என்ற சோழநாட்டு வீரர் தளபதியாக செயல்பட்டு போரை நடத்தினார். போரில் புலிகேசி கொல்லப்பட, பல்லவ படைகள் பெரு வெற்றியடைந்தன. போர் முடிவில் சாளுக்கிய தலைநகர் வாதாபி சூறையாடப்பட்டது.
பல்லவ தளபதி பரஞ்சோதி (பின்னர் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்) போர் வெற்றியின் நினைவாக வாதாபியில் இருந்து விநாயகர் சிலை ஒன்றை கொணர்ந்து தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்ததாக கர்ணபரம்பரையாக சொல்லப்படுகிறது. (இந்த கதைக்கு வரலாற்று சான்றுகள் ஏதும் கிடைக்கவில்லை)
இதே கதையை கொஞ்சம் மாற்றி பரஞ்சோதி தான் கொண்டுவந்த விநாயகர் சிலையை திருவாரூர் கோவிலில் பிரதிஷ்டை செய்ததாக சொல்லப்படுகிறது.
இதில் எது உண்மை ?
பல்லவ சாளுக்கிய போரை மையப்படுத்தி எழுதப்பட்ட சிவகாமியின் சபதம் நூலில் எழுத்தாளர் கல்கி வாதாபி கணபதி திருச்சங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவே குறிப்பிடுகிறார்.
ஆனால் ஆராய்ச்சியாளர்கள் கல்கியின் கூற்றை மறுக்கின்றனர்.
திருவாரூர் கோவிலை பற்றி மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்த பிரபல கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் திருவாரூர் கோவிலில் முதல் பிரகாரத்தில் (தியாகராஜர் சிலைக்கு பின்புறம்) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரே உண்மையான வாதாபி விநாயகர் என தனது திருவாரூர் திருக்கோவில் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
" சிறுதொண்டரால் கொணரப்பட்ட கணபதி, அவரது சொந்த ஊரான திருச்சங்காட்டங்குடியில் பிரதிஷ்டை செய்ததாகக்கூறி அத்திருக்கோயில் "வாதாபி விநாயகர்" என்ற திருப்பெயரில் பூஜிக்கப் பெறுகின்றது. சிற்ப இயல் அடிப்படையில் நோக்கும்போது அது மேலை சாளுக்கியர்களின் வாதாபி நகர கலை பாணி அன்று. மாறாக நமது சோழநாட்டுத் திருமேனியாகத்தான் (சோழர்கள் காலப் பாணி) உள்ளது. ஆனால் திருவாரூரில் உள்ள "வாதாபி விநாயகர்" என்னும் சிற்பம் தமிழகசிற்ப அமைப்பிலிருந்து மாறுபட்டும், தொன்மையானதாகவும் சாளுக்கிய நாட்டு சிற்ப எழிலுடன் உள்ளது சிந்திக்கதக்கதாகும். முத்துசுவாமி தீட்சிதர் யாத்த "வாதாபி கணபதி பஜேஹம்" என்ற பாடல் இவர் முன்பு இயற்றப்பட்டது என்ற பெருமையும் ஆரூரில் உள்ள இக்கணபதியாருக்கு உண்டு." - குடவாயில் பாலசுப்ரமணியன், திருவாரூர் திருக்கோவில் புத்தகம் ISBN:978-93-80342-35-1, பக்கம் எண் 207 விநாயகர் வழிபாட்டை பற்றி ஆய்வு செய்த டேவிட் பிரவுன் (David Brown) என்ற அமெரிக்க இறையியல் ஆய்வாளர் எழுதிய Ganesh: Studies of an Asian God புத்தகத்தில் திருவாரூரில் உள்ள விநாயகரே வாதாபியில் இருந்து கொண்டுவரப்பட்ட விநாயகர் என குறிப்பிட்டுள்ளார். தேடல் தொடரும்.... டேவிட் பிரவுன் ஆராய்ச்சி, காஞ்சி ஆச்சார்யர் கருத்து மற்றும் இரண்டு வாதாபி விநாயகர் படங்கள் ஒப்பிடுதலுடன் அடுத்த கட்டுரையில் படிக்க: எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2) |
Comments
Post a Comment
Post ur comments and help us to improve