பாதுகாப்பு + பொருளாதாரம் = வெளியுறவு கொள்கை
நம்மில் பலரும் foreign affairs என்று சொல்லப்படும் வெளியுறவு கொள்கை மற்றும் வெளிநாடுகளுடன் நல்லுறவை வளர்க்க இந்தியா எடுக்கும் நடவடிக்கைகள் எல்லாம் பொழுது போக்கிற்கு செய்யும் வெட்டி வேலை என்றே எண்ணுகிறார்கள்.
ஆனால் நமது நாட்டின் பாதுகாப்பை மட்டுமல்ல பொருளாதாரத்தையும் வளர்ப்பதில் வெளியுறவு கொள்கை மிக முக்கிய பங்காற்றுகிறது.
ஒரு உதாரணம் சொல்கிறேன்..
வெள்ளி போல தோற்றம் அளிக்கும் லித்தியம் (Lithium) உலோகத்தை பேட்டரி தயாரிப்பில் முதன்மை மூலப்பொருளாக பயன்படுத்துகின்றனர். நமது செல்போன் பேட்டரிகள் Lithium Ion என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.
பொலிவியா (Bolivia) என்ற வட அமெரிக்க நாட்டில் லித்தியம் எக்கச்சக்கமாக கிடைக்கிறது. இதே போல் பொலிவியாவை சுற்றி இருக்கும் அர்ஜென்டீனா (Argentina) மற்றும் சிலி நாட்டிலும் அள்ள அள்ள குறையாத லித்தியம் கிடைக்கிறது. இந்த மூன்று நாடுகளை Lithium Triangle Countries என்று செல்லமாக அழைப்பர்.
இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் தங்களது பெட்ரோல் மற்றும் டீசல் இறக்குமதியை குறைக்க (இந்தியா ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பெட்ரோலிய பொருட்களை இறக்குமதி செய்கிறது) எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக எலக்ட்ரிக் கார்களை (EV Cars) ஊக்குவிக்கின்றன.
எலக்ட்ரிக் கார்கள் பெட்ரோல் கார்களை ஒப்பிடும் பொழுது KM க்கு ஆகும் செலவில் மிகவும் குறைவானவை, அதே சமயம் சுற்றுசூழலுக்கும் உகந்தவை. ஆனால் EV கார் தயாரிப்பில் உள்ள பெரிய குறைபாடு கார்களுக்கு தேவையான லித்தியம் பேட்டரிகள் தயாரிப்பு செலவு மிக அதிகம்.
இந்தியாவில் லித்தியம் கிடைப்பதில்லை, வெளிநாட்டில் இருந்துதான் வாங்கவேண்டும். லித்தியம் என்றாலே மேலே சொன்னது போல் அர்ஜென்டீனா, சிலி அல்லது பொலிவியா என யாராவது ஒருத்தரிடம் தான் வாங்கவேண்டும்.
பொலிவியா போன்ற தேசத்தில் லித்தியம் தவிர வேறு பெரிய வளங்கள் ஏதும் இல்லாததால் லித்தியம் வெட்டி எடுத்தலை தேசிய மயமாக்கி வைத்துள்ளனர். அதாவது இருக்கும் ஒரு தனிமமான லித்தியத்தை பொலிவியா அரசாங்கத்தின் நிறுவனம் மட்டுமே வெட்டி எடுத்து ஏற்றுமதி செய்யும். யாருக்கு லித்தியம் வேண்டுமென்றாலும் பொலிவியா அரசாங்கத்தை தான் தொடர்பு கொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கு லித்தியம் தேவை உள்ளது. இத்தனை நாளும் இந்தியாவிற்கும் பொலிவியா அரசாங்கத்திற்கும் பெரிய நட்பெல்லாம் கிடையாது. இப்பொழுது இந்தியா இதற்கான முயற்சிகளை எடுக்கிறது. வரும் நாட்களில் இருநாட்டு அரசு பிரதிநிதிகளும் பிறர் நாட்டுக்கு செல்வதும், ஒப்பந்தம் கையெழுத்து ஆவதும், கை குலுக்கி போட்டோ எடுப்பதெல்லாம் நடக்கும்.. நடக்கவேண்டும்... காரணம் நமக்கு தேவை இருக்கிறது.
மோடி மட்டுமல்ல நாளை திமுகவின் ஸ்டாலின் பிரதமர் ஆனாலும் இந்திய பிரதமர் என்கிற முறையில் இதெல்லாம் செய்துதான் ஆகவேண்டும். வெளியுறவு கொள்கைக்காக மேற்கொள்ளும் பயணங்களை கிண்டல் செய்வதும் அதை வைத்து அரசியல் செய்வதும் சுத்த பைத்தியக்காரத்தனம்..
மேற்கோள்கள் :
Comments
Post a Comment
Post ur comments and help us to improve