ஆன்லைன் வர்த்தகமும், இந்திய பொருளாதாரமும்

(இந்த கட்டுரை புதியதலைமுறை தமிழ் வார இதழின் 24 அக்டோபர் பதிப்பில் வெளிவந்தது..)

இந்திய பொருளாதாரம் தேக்கநிலையை என்றொரு செய்தி ! பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்களின் பண்டிகைக்கால தள்ளுபடி விற்பனையில் ஆறே நாட்களில் சுமார் ₹ 19,000 கோடிக்கு வர்த்தகம் என்றொரு செய்தி ! இவை இரண்டையும் எப்படி பொருத்தி பார்ப்பது என்பதே பலரின் கேள்வி

இரண்டு முக்கிய புரிதல்களுடன் இந்த செய்தியை அணுகவேண்டும் என்று நான் நினைக்கிறன்.

முதலாவது பிளிப்கார்ட், அமேசான் இரண்டு நிறுவனங்களுமே தங்களின் விற்பனையின் அளவை எக்காலத்திலும் வெளிப்படையாக அறிவிப்பதில்லை.

₹ 19,000 கோடி வரை விற்பனை என்பது யாரோ மூன்றாம் நபர் வெளியிட்டுள்ள கணிப்பு அல்லது அலசல் என்பதை நாம் கவனிக்கவேண்டும். உண்மையான விற்பனை இதைவிட அதிகமாகவோ அல்லது மிகக்குறைவாகவோ கூட இருக்க வாய்ப்புண்டு.

இரண்டாவது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து (slowdown) காணப்படுகிறது. ஆனால் அது 2008 ஆம் ஆண்டு நாம் சந்தித்ததை போன்ற மந்தநிலையாக (recession) மாறிவிடவில்லை.  

உலகவங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட இந்திய பொருளாதார வளர்ச்சி 6% இருக்கும் என்றே சொல்லப்பட்டுள்ளது தவிர எதிர்மறை எண்ணாக (-ve) இருக்கும் என்று சொல்லப்படவில்லை.

நாட்டின் வளர்ச்சி வேகம் குறைவதால் மக்கள் தங்களின் வருமானத்தில் இந்த ஆண்டு பெரிய ஏற்றம் இருக்காது என்று கணிக்கிறார்கள். எனவே அன்றாட செலவுகளை தாண்டி மற்ற செலவுகள் மற்றும் பொருட்கள் வாங்கும் திட்டங்களை ஒத்திவைக்கிறார்கள். 

ஆனாலும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்கள் இவற்றுக்கு விதிவிலக்கு. இந்த காலகட்டத்தில் மக்களால் செலவுகளை தவிர்க்க முடிவதில்லை. இதை குறிவைத்துதான் அமேசான் பிளிப்கார்ட் இரண்டும் தள்ளுபடி விற்பனையை அறிவித்தன. குறிப்பாக சம்பள நாளான செப்டம்பர் கடைசி மற்றும் அக்டோபர் முதல் வாரத்தை விற்பனை காலமாக புத்திசாலித்தனமாக தேர்வுசெய்திருந்தன.

மக்களின் வாங்கும் ஆர்வத்தை தூண்ட பல பொருட்களுக்கு சலுகைகளை அள்ளி வீசியிருந்தார்கள். நண்பர் ஒருவர் ₹ 71,000க்கு கடையில் விலை விசாரித்து வைத்திருந்த ஆப்பிள் மேக்புக் மடிக்கணினியை ₹ 50,000க்கு பிளிப்கார்ட் 6 நாள் தள்ளுபடி விற்பனையில் வாங்கினார் என்றால் பார்த்துக்கொளுங்கள்.

அடுத்தது பிளிப்கார்ட், அமேசான் இரண்டு நிறுவனங்களுமே வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து வட்டியில்லா தவணை முறை (No Cost EMI) திட்டங்களை தருகிறார்கள். ₹ 10,000 ரூபாய் பொருளை 24 மாத வட்டியில்லா தவணைக்கு அமேசான் நிறுவனம் விற்பதாக நண்பர் ஆச்சரியப்பட்டார். 

தவணை முறையில் பொருட்களை கடைகளிலும் வாங்கமுடியும் என்றாலும் கடைகளில் வட்டியில்லா தவணை முறை பெரும்பாலும் வழங்கப்படுவதில்லை. அதே போல் கடைகளில் தவணை முறையில் வாங்க செயலாக்க கட்டணம் (Processing Fee) செலுத்தவேண்டி வரும். ஆனால் ஆன்லைலில் அந்த கட்டணங்கள் கிடையாது என்பது கூடுதல் வசதி.

வீட்டு வாசலுக்கு வரும் பொருட்கள், வட்டியில்லா கடன், அதிரடி விலை குறைப்பு என வாடிக்கையாளரின் பார்வையில் கடைகளை விட்டுவிட்டு ஆன்லைனில் பொருட்கள் வாங்க நியாயமான காரணங்கள் நிறைய உண்டு. ஆன்லைன் நிறுவனத்தில் பொருட்களை வாங்க தயக்கம் காட்டுபவர்கள் கூட கடைகளில் பொருட்களின் விலையை பேரம் பேசி குறைக்க பிளிப்கார்ட், அமேசான் போன்ற தளங்களை பயன்படுத்துகிறார்கள் என்பதே உண்மை. 

தற்போது வரை இந்தியாவின் மொத்த சில்லறை விற்பனையில் வெறும் 5% அளவுதான் ஆன்லைன் வழியாக நடக்கிறது. எனவே அவற்றின் விற்பனை எண்களை மட்டும் வைத்து இந்திய பொருளாதாரத்தின் நிலையை கணிப்பது சரியாக இருக்காது. 

தேக்கநிலையோ, உச்ச வளர்ச்சியோ மக்கள் பொருட்களை வாங்கும் விதத்தில் மாற்றம் நடந்துவருவது  வெளிப்படையாக தெரிகிறது. ஆன்லைன் நிறுவனங்களுக்கு போட்டியாக கடை வைத்திருப்போர் தங்கள் விற்பனை யுத்திகளை மாற்றிக்கொள்ளாவிடில் தங்களின் எதிர்காலம் கேள்விக்குறையாகி விடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)