புதிய வருமானவரி விதிப்பு முறை - ஒரு அலசல்

(இந்த கட்டுரையின் ஒரு பகுதி புதியதலைமுறை வார இதழில் வெளிவந்தது)

வரும் நிதியாண்டு முதல் இந்தியாவில் இரண்டு விதமான வருமான வரி விதிப்பு முறை அமலில் இருக்கப்போகின்றன.

பழைய வரிவிதிப்பு முறை :

இந்த முறைப்படி உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை குறிப்பிட்ட நீண்ட சில கால திட்டங்களில் முதலீடுகள் செய்தவர்களுக்கும், வீட்டுக்கடன், கல்விக்கடன் கட்டிவருபவர்களுக்கும், எல்ஐசி அல்லது பிற நிறுவனங்களில் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டிவருபவர்களுக்கும் அரசாங்கம் பல வருமானவரி சலுகைகளை அளித்து வந்தது.

இந்த சலுகைகள் மூலம் நீண்ட கால திட்டங்களில் முதலீடு செய்ய மறைமுகமாக அரசாங்கம் மக்களை ஊக்குவித்து வந்தது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய வருமான வரி முறை :

இந்த முறைப்படி உங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை அரசாங்கத்துக்கு வருமான வரியாகசெலுத்தவேண்டும். மிச்சம் இருக்கும் பணம் உங்கள் கையில். அதை பங்குசந்தையில் முதலீடு செய்வதா, இன்சூரன்ஸ் வாங்குவதா, வீடுகட்டுவதா, கார் வாங்குவதா, வங்கியில் போடுவதா  என்பதெல்லாம் உங்கள் பிரச்சனை. அதை பற்றி அரசாங்கம் இனி எந்த கவலையும் கொள்ளாது.

உதாரணத்துக்கு, ஆண்டுக்கு 10 லட்சம் வருமானம் வரக்கூடிய நபர் வருமான வாரியாக (கணக்கீடுக்கு 15% என்று வைத்துக்கொள்வோம்) 1.5 லட்ச ரூபாயை செலுத்திவிட்டால் போதும். மிச்சம் இருக்கும் 8.5 லட்ச ரூபாயை என்ன செய்வது என்பது அந்த நபரின் விருப்பம்.

யாருக்கு இந்த புதிய முறையில் லாபம் ?

தொழில் நடத்தி வரும் நண்பரிடம் வருமான வரியில் சில ஆயிரங்களை சேமிக்க வருடாவருடம் ஒன்றரை லட்சத்தை 5 வருட நிலையான வைப்பு நிதியில் (FD) முதலீடு செய்யுங்கள் என்றால் சிரிப்பார்

தொழில்நடத்த மூலதனம் திரட்டுவது கடினமான காரியம். வங்கியில் கடன் வாங்குவதோ, வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்கி திரும்ப செலுத்துவதோ அத்தனை எளிதல்ல

அப்படி இருக்கையில் வருமானவரியில் சில ஆயிரங்களை சேமிக்க ஏன் கடை மூலதனத்தில் இருந்து 1.5 லட்ச ரூபாயை எடுத்து வங்கியில் 5 வருடம் போட்டு வைக்கவேண்டும் என்பதே அவர் பார்வை. அவரைப்போன்ற தொழில் முனைவோருக்கு இந்த புதிய வருமான வரி திட்டம் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்

அதே போல் வருமான வரி விலக்கு அதிகம் கோராதவர்களுக்கும், வருமான வரியில் மிச்சம் பிடிப்பதற்காக முதலீடுகளை திட்டமிட வாய்ப்பு இல்லாதவர்களுக்கும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்

யாருக்கு இந்த புதிய முறை சரிப்பட்டுவராது ?

சம்பளக்காரர்கள் குறிப்பாக வருமான வரி சேமிப்பை மனதில் வைத்து ஏற்கனவே நீண்ட காலதிட்டங்களில் முதலீடு செய்துவருபர்கள், வீட்டுக்கடன் பெற்றவர்கள், PPF, NPS திட்டங்களில் கூடுதலாக பணம் போட்டு வருபவர்கள் இந்த புதிய வருமான வரிவிதிப்பு முறையை தவிர்த்து பழைய முறையில் தொடர்வதே நல்லது.

இந்த புதிய முறையின் தாக்கம் என்னவாக இருக்கும் ?


வரும் நிதியாண்டு முதல் நிறுவனங்கள் தங்கள் ஊழியர் ஒவ்வொருவரும் எந்த வருமான வரைமுறையை பின்பற்ற விரும்புகிறார் என்ற அவரது விருப்பத்தை பதிவுசெய்து அதற்கு ஏற்றார் போல் வருமானவரி பிடித்தம் செய்ய வேண்டும். இது நிறுவனங்களுக்கு பெரிய தலைவலியாக மாறும்.

வங்கி, இன்சூரன்ஸ், மியூசுவல் ஃபண்ட் போன்றவற்றில் பணம் போடுவதற்கு எந்த சிறப்பு சலுகையும் கிடையாது என்பதால் மக்கள் சிட் ஃபண்ட் அல்லது தங்கத்தின் பக்கம் தங்கள் முதலீட்டின் பார்வையை திருப்ப வாய்ப்புக்கள் அதிகம்.

வருமான வரியில் சேமிப்பு கிடைக்கும் என்ற ஒன்றையே விற்பனை யுத்தியாக கொண்டு பல தேவையில்லாத திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டி பணம் பார்த்த இன்சூரன்ஸ், மியூசுவல் ஃபண்ட் மற்றும் எல்ஐசி ஏஜெண்டுகள் பாடு இனி சிரமம்.

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)