மக்கள் போராட்டங்கள் பற்றிய எனது பார்வை
குறிப்பு : இந்த கட்டுரை ஸ்டெர்லைட் சரியா தவறா என்பதை பற்றியதல்ல. ஸ்டெர்லைட் ஆலையை மூட சொல்லி வந்திருக்கும் உத்தரவு போராட்டகாரர்களுக்கு கிடைத்துள்ள வெற்றி தான்.. இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றம் சென்றால் என்ன ஆகும் இந்த பிரச்சனை எந்த கோணத்தில் செல்லும் என்பதெல்லாம் கணிக்க முடியாதவை.. ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். மக்களுக்கு அரசாங்கம் மீதும் அவர்கள் தரும் தரவுகள் மீதும் நம்பிக்கை போய்விட்டது .. நாளைக்கே ஸ்டெர்லைட் சரியா தவறா என்று ஒரு ஆய்வை அரசாங்கம் நடத்தி முடிவு வெளியிட்டால் கூடமக்கள் நம்பப்போவதில்லை. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை சரியென்று தீர்ப்பு சொன்னால் நீதிபதிக்கு எத்தனை பெட்டி கைமாறியதோ என்று தான் நாம் நினைப்போம்... 100 ரூபாய் கொடுத்தால் சாமானியரே என்ன certificate வேண்டுமானாலும் அரசாங்க அதிகாரியிடம் வாங்கிவிட முடியுமென்றால் 1000 கோடிகள் வைத்திருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சில துண்டுகளை தூக்கிப்போட்டால் இந்த அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என சாமானியர் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்