வங்கி தேர்வுகளுக்கு தயார் செய்துகொண்டிருப்போர் உடனடி கவனத்திற்கு

இந்திய வங்கித்துறை வாராக்கடன் (NPA) பிரச்சனை காரணமாக மிகப்பெரிய அழுத்தத்தில் உள்ளது. வங்கிகளின் லாபம் குறைந்து கொண்டேபோவதும், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழியர்கள் நீரவ் மோடிக்கு 11,000 கோடி அளவுக்கு ஊழல் செய்ய உதவி செய்ததும் கடந்த மாதங்களில் ஊடக செய்திகளை ஆக்கிரமித்திருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

தகுதி இல்லாதவர்களுக்கு வழங்கிய கோடிக்கணக்கான கடன்கள் காரணமாக இன்று பல பொதுத்துறை வங்கிகள் மிக மோசமான நிதி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வாராக்கடன் அளவு ஒரு கட்டத்துக்கு மேல் அதிகரிக்கும் பொழுது Prompt Corrective Action (PCA) என்றழைக்கப்படும் வங்கியை இழுத்து மூடாமல் காப்பாற்றும் தற்காப்பு முயற்சிகளை  ரிசர்வ் வங்கி மேற்கொள்ள துவங்கும். ஒரு வங்கி PCA நடவடிக்கைக்கு உள்ளானதாக ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்தால் அந்த வங்கியின் தினசரி நடவடிக்கைகள் பாதிக்கப்படாது. ஆனால் அந்த வங்கி புதிய கடன்கள் ஏதும் வழங்க முடியாது.

தேனா வங்கியின் (Dena Bank) வாராக்கடன் மிக அதிக அளவு சென்றுவிட்டதால் அந்த வங்கியை PCA நடவடிக்கையின் கீழ் சேர்ப்பதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்துள்ளது. தேனா வங்கி இனிமேல் புதிய கடன்கள் வழங்க கூடாது, புதிதாக ஊழியர்கள் யாரையும் வேலைக்கு எடுக்கக்கூடாது என்ற இரண்டு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இதற்கு அர்த்தம் வங்கியின் நிதிநிலைமை மீண்டுவரும் வரையில் IBPS மற்றும் இன்ன பிற வங்கி தேர்வுகள் மூலம் தேனா வங்கியில் யாரும் பணியில் சேர முடியாது.

ஏற்கனவே IDBI Bank, Indian Overseas Bank, Central Bank of India, Bank of Maharashtra, United Bank of India, Corporation Bank, Oriental Bank of Commerce, Bank of India, UCO Bank, and Allahabad Bank போன்றவற்றை PCA நடவடிக்கையின் கீழ் RBI கொண்டுவந்துள்ளது.

வங்கிகளில் ஆளெடுப்பே இருக்காது என்று நான் சொல்லவில்லை ஆனால் வாராக்கடன் அளவு, லாபம் குறைதல், PCA நடவடிக்கைகள் காரணமாக வங்கி ஆளெடுப்பு மிகப் பெரிய அளவில் குறையப்போகிறது என்பது அப்பட்டமான உண்மை.

எனவே வங்கியில் வேலைபார்க்கும் ஊழியர்களில் இத்தனை லட்சம் பேர் 55+ வயதினர், இத்தனை லட்சம் பேர் பணி ஓய்வு பெறப்போகிறார்கள், எனவே உங்களுக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்று Bank Coaching Center நடத்துவோர் தரும் விளம்பரங்களில் கவனமாக இருங்கள்.

வங்கி பரிச்சைக்கு பயிற்சி எடுப்பதாக சொல்லிவிட்டு இருக்கும் வேலையை விட்டு விடும் முட்டாள்தனங்களை தயவு செய்து செய்யவேண்டாம். என்னதான் அரசும் RBI யும் துரித நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் வங்கிகள் இந்த வாராக்கடன் (NPA) சிக்கலில் இருந்து மீண்டு வர சிலவருடங்கள் ஆகும் என்றே நான் கருதுகிறேன்

Reference

1. https://www.businesstoday.in/sectors/banks/rbi-initiates-prompt-corrective-action-against-dena-bank-due-to-mounting-npa/story/276773.html

2. https://www.motilaloswal.com/article.aspx/1231/What-does-Prompt-Corrective-Action-(PCA)-mean-for-PSU-banks

3. https://patrikai.com/rbi-stopped-denabank-to-issue-fresh-loans/

4. https://www.thehindubusinessline.com/money-and-banking/prompt-corrective-action-a-move-to-merge-banks-aiboc/article10017216.ece

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)