மக்கள் போராட்டங்கள் பற்றிய எனது பார்வை
குறிப்பு : இந்த கட்டுரை ஸ்டெர்லைட் சரியா தவறா என்பதை பற்றியதல்ல.
ஆனால் இதில் கவனிக்க வேண்டியது ஒன்றுதான். மக்களுக்கு அரசாங்கம் மீதும் அவர்கள் தரும் தரவுகள் மீதும் நம்பிக்கை போய்விட்டது.. நாளைக்கே ஸ்டெர்லைட் சரியா தவறா என்று ஒரு ஆய்வை அரசாங்கம் நடத்தி முடிவு வெளியிட்டால் கூடமக்கள் நம்பப்போவதில்லை. உச்ச நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை சரியென்று தீர்ப்பு சொன்னால் நீதிபதிக்கு எத்தனை பெட்டி கைமாறியதோ என்று தான் நாம் நினைப்போம்...
100 ரூபாய் கொடுத்தால் சாமானியரே என்ன certificate வேண்டுமானாலும் அரசாங்க அதிகாரியிடம் வாங்கிவிட முடியுமென்றால் 1000 கோடிகள் வைத்திருக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சில துண்டுகளை தூக்கிப்போட்டால் இந்த அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளமாட்டார்கள் என்று என்ன நிச்சயம் என சாமானியர் நினைப்பதில் என்ன தவறு இருக்கமுடியும் ?
இத்தனை ஆண்டுகள் மக்கள் மனதில் படிந்து வந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மை தான் ஸ்டெர்லைட் போன்ற போராட்டங்களில் வெளிப்படுகிறது என்று நினைக்கிறன். அவர்கள் சரி தவறு என்பதையெல்லாம் தாண்டி அரசாங்கம் பணம் வைத்திருப்பவனுக்கு சாதகமானது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அவர்கள் அரசாங்கம் தரும் எந்த தரவுகளையும் நம்பத்தயாரில்லை...
இப்படியே சென்றால் அரசாங்கம் தனது எதிர்கால திட்டங்கள் எல்லாவற்றுக்கும் மக்களை ஒத்துக்கொள்ள வைப்பதில் பெரிய சவால்களை சந்திக்க வேண்டி வரும்
எது சரி எது தவறு என்று மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர மக்கள் அல்ல.. ஆனால் அதற்கு அரசாங்கம் மக்களை பற்றி சிந்திக்கும் அரசாங்கமாக இருக்கவேண்டும்.. இந்தியாவில் அது இன்னும் ஒரு கனவு தான். அதுவரை ஆய்வுகளோ தரவுகளோ அல்ல உணர்ச்சிகள் தான் போராட்டங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும்.
உணர்ச்சிகளால் உந்தப்படும் மக்கள் போராட்டங்களும் அதன் நீட்சியும் இந்தியா போன்ற வளரும் நாட்டிற்கு நல்லதல்ல !