இந்திய கிரிக்கெட் அணி தேசிய அணியா ?
சரிதா தேவி , இந்திய மகளிர் குத்து சண்டை போட்டியில் தங்கம் வெல்லும் வாய்ப்பு இருந்தும் நடுவரின் தவறால் அரையிறுதியில்
வெளியேற்றப்பட்டு வெண்கலம் வென்றார்.
பதக்க விழாவில் அவர் கதறி அழுது பதக்கத்தை வாங்கமறுத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
இந்திய போன்ற ஒரு நாட்டில் பிறந்து பல கட்ட ஊழல்கள், சிபாரிசுகள், அமைச்சர்கள், அதிகாரிகளின் தலையீட்டை எல்லாம் போராடி வென்று ஆசியா கோப்பை போன்ற ஒரு போட்டிக்கு செல்வதே பெரிய உலக சாதனையாகும்.
அப்படி போராடி கலந்து கொண்ட போட்டியில் நடுவரின் அநீதியால் பதக்கத்தை பறிகொடுத்து, தங்கத்துக்கு பதிலாக வெண்கல பதக்கம் தரப்பட்ட பொழுது சரிதா தேவியின் மனம் எப்படி துடித்திருக்கும் என்பதை நினைப்பதற்கே கடினமாக உள்ளது.
பதக்கங்களின் மதிப்பை நமக்கு உணர்த்திய நிகழ்வு அது.
இங்கே மற்றொரு விளையாட்டு,
இந்தியராகிய நாம் உயிராக கருதும் கிரிக்கெட்.
ஆசியா போட்டிகளிள் 2010 முதல் கிரிக்கெட் சேர்த்து கொள்ளப்பட்டது. இதுவரை இரண்டு ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் விளையாடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அணி இருமுறையும் தங்கள் நாட்டின் சார்பாக எந்த வீரரையும் அனுப்பி வைக்க வில்லை.
அதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சொன்ன காரணம், இந்திய வீரர்கள் போட்டிகளில் பிஸி என்பது.
சரி ஏதோ சர்வதேச போட்டிகளில் பங்கேற்கிறார்கள் என்று பார்த்தால் அதுதான் இல்லை. இந்திய கிரிக்கெட் அணியின் பல வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் விளையாடி கொண்டு இருந்தார்கள்.
சாம்பியன்ஸ் கோப்பை என்ன தேசத்திற்காக ஆடப்படும் போட்டியா ?
அது பணக்காரர்களின் அணிகள் ஆட்டம் தானே ? அப்படி என்றால் இந்திய கிரிக்கெட் வாரியம் எதை முன்னிறுத்துகிறது ?
ஆசிய போட்டிகளில் விளையாடினால் என்ன கிடைக்கும். மிஞ்சிப் போனால் ஒரு தங்கப்பதக்கம் அதைவைத்து கொண்டு என்ன செய்வது ? சாம்பியன்ஸ் கோப்பை நடத்தினால் எத்தனை கோடிகள் புரளும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் எண்ணி இருக்கும்.
ஒரு பெரிய கொடுமை என்னவெனில் இன்னும் ஒரு தங்கம் வந்திருந்தால் கூட பதக்க பட்டியலில் இந்தியா இரண்டு இடங்கள் முன்னே சென்றிருக்கும்.
மற்றொரு கொடுமை ஆசியா கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிகளில் விளையாடியது இலங்கையும் ஆப்கானிஸ்தானும். இந்தியா தனது எ அணியை அனுப்பி இருந்தால் கூட பதக்கம் உறுதி என்பது ஊரறிந்த உண்மை , இதே நிலைதான் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும்.
இந்தியா தெரிந்தே இரண்டு பதக்கங்களை இழந்துள்ளது.
சரிதா தேவியின் பதக்கத்துக்கான கண்ணீரையும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல் பாட்டையும் ஒப்பிட்டால் பணப் பேய்களின் ஓலம் வெளிச்சம் ஆகிறது . மீடியாவும், அரசும் கூட இதை பற்றி பெரிதாக பேசவில்லை என்பதை வைத்தே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பண மற்றும் அதிகார பலத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவுக்காக ஆடாத ஒரு அணி. அதன் ரசிகன் என்று சொல்லி கொள்வதில் வெட்கி தலை குனிகிறேன்.
Comments
Post a Comment
Post ur comments and help us to improve