வெற்றி பெருமிதம்

வருடம் 2008

நான் 10 வகுப்பு வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்ததால் என்னை ராசிபுரம் நாமக்கல் போன்ற பகுதிகளில் சேர்த்து மனப்பாட இயந்திரம் ஆக்கவேண்டும் என்ற பலரது அறிவுரைகள் எங்கள் அப்பாவுக்கு சொல்லப்பட்டன.

எனக்கு வயிற்றில் புளியை கரைப்பது போல் இருந்தது.

ஆண்டவன் புண்ணியத்தில் என்னை திருவாரூரில் நான் 10 ஆம் வகுப்பு படித்த அதே பள்ளியில் சேர்த்து விட்டனர். வருமான சான்றிதல் பெற்று வரும் படி சொல்லியது பள்ளி நிர்வாகம்.

என் தந்தை வருமான சான்றிதல் பெற என்னை அனுப்பிவைத்தார். இதற்கு முன் நான் எந்த அரசு அலுவலகத்துக்கும் சான்றிதழ் பெற சென்றது இல்லை. சரி நம்மளும்  அரசாங்க சான்றிதல் வாங்குற அளவுக்கு  பெரிய புள்ள ஆகிட்டோம் போல என்று மனதுக்குள் நினைத்து கொண்டு இன்னும் சில நண்பர்களையும் சேர்த்து கொண்டு  சைக்கிளில் கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க சென்றேன்.

எனக்கான வேலைகள் தெளிவாக தரப்பட்டன. முதலில் வீ. ஏ. ஓ, பிறகு ஆர். ஐ அலுவலகம் பிறகு தாசில்தார் அலுவலகம் என எங்கு செல்லவேண்டும் என்பதெல்லாம் தெளிவாக சொல்லி அனுப்பினார் என் தந்தை.

வீ. ஏ. ஓ அலுவலகத்திற்கு சரியாக 10.30 மணிக்கு நண்பர்கள் இருவருடன் சென்றேன்.

ஐயா இன்னும் வர்ல நேரம் ஆகும் தம்பி என்றார் அலுவலகத்தில் இருந்த தலையாரி. 11 மணி வரை காத்திருந்தோம் ஐயா வருவதாக தெரியவில்லை.
12.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்த அனைவரும் பரபரப்பு ஆகினர்.

ஐயா வந்தாச்சு !

எங்களை போன்று சான்றிதல் வாங்க பலர் காத்திருந்தனர். அனைவரும் அலுவலகத்துக்குள் முண்டியடிக்க அனைவரையும் வெளியே காத்திருக்கும் படி தலையாரி கூறினர். ஒருவர்பின் ஒருவராக ஐயாவிடம் கையப்பம் பெற்று சென்றனர். கடைசியாக நாங்கள் நுழைந்தோம்.

Digital Native World


விண்ணப்பதை நீட்டினோம், வாங்கி பார்த்த ஐயா எங்கள் 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களை கேட்டு பாராட்டினர்.

ரொம்ப நல்ல ஐயா ( ? ) என்று மனதுக்குள் எண்ணி கொண்டோம்.

கையெழுத்து போட்டு எங்கள் விண்ணப்பங்களை கையில் கொடுத்தார். அதை வாங்கி கொண்டு சந்தோஷமாக அலுவலகத்தை விட்டு வெளியேறினோம்.

சைக்கிளை திருப்பும் பொழுது தலையாரி எங்களை நோக்கி ஓடிவந்தார்.
உங்கள ஐயா அழைக்கிறார் என்றார் மூச்சு வாங்க.

ஏதோ தவறு செய்து விட்டோம் போல என எண்ணி அவசர அவசரமாக உள்ளே நுழைந்தோம்.

என்ன தம்பி ? நீங்கபாட்டுக்கு கிளம்பிட்டிங்க ? பணம் கொடுங்க என்றார் அந்த நல்ல ஐயா.

நாங்கள் பணம் இல்லாதது போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டோம். அவர் விடுவதாக தெரியவில்லை. வேறு வழி இல்லாமல் ஆளுக்கு 30 ரூபாய் என மொத்தம் 90 ரூபாய் எடுத்து கொடுத்தோம்.

கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார் அந்த ஐயா.

தம்பி டீ என்ன விலை விற்குதுன்னு தெரியுமா ? ஒரு கையெழுத்து 30 ரூபாய் தர்ரிங்க என்றார் .

பதிலுக்கு நான்

ஐயா, அடுத்து ஆர். ஐ, தாசில்தார் ஆபீஸ்க்களம் போகணும், கொஞ்சும் பார்த்து உதவி பண்ணுங்க என்றேன் சோகமாக.

எங்களை ஏற இறங்க பார்த்த அவர் கோபத்தோடு சரி கெளம்புங்க, அடுத்த சான்றிதலுக்கு ஒழுங்கா 50 ரூபாய் எடுத்து வரணும் என்றார். சரி என்று மண்டையை ஆட்டி விட்டு ஓட்டமாக கிளம்பினோம் சைக்கிளை நோக்கி.

என் அப்பா வீ . ஏ . ஓ விற்கு கொடுக்க 50 ரூபாய் கொடுத்து இருந்தார். அதில் 20 ரூபாய் மிச்சம்.

நம்மளும் பெரிய புள்ள ஆகிட்டோம். சான்றிதல் வாங்குறோம், சாமர்த்தியமா 20 ரூபாயை மிச்சம் பிடிச்சுருக்கோம் என்று   வெற்றி பெருமிதத்துடன் வீட்டுக்கு வந்தேன்.

என் அப்பாவிடம் நடந்ததை கூறினேன்

சின்ன பசங்கள அனுப்புனா காசு கம்மிய வாங்கு வாங்கன்னு தெரிஞ்சுதான் உன்ன அனுப்புனேன் என்றார் சாதரணமாக.

சின்ன பசங்க என்ற வார்த்தையை கேட்டதும் வெற்றி பெருமிதம் வெற்று பெருமிதம் ஆனது ! 

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

நல்ல தமிழில் எழுதுவோம் - 1

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 2)