சமூக ஊடகங்களில் தேவை கவனம்

இந்த கட்டுரையின் ஒரு பகுதி புதியதலைமுறை வார இதழின் 7 மார்ச் 2019 பதிப்பில் வெளிவந்தது..


என்னதான் 60+ வருடங்களாக ஜனநாயக நாடாக இருந்தாலும், ஓட்டு பெட்டியை தாண்டி சாதாரண மக்களுக்கு தங்கள் குரலை பதிவு செய்ய ஒருவாய்ப்பு சமீப ஆண்டுகளாகத்தான் கிடைத்துள்ளது. அதற்கு சமூக ஊடகங்களுக்கு தான் நாம் நன்றி சொல்லவேண்டும்.

வெறும் பொழுது போக்கு இடமாக மட்டுமே துவங்கப்பட்ட சமூக ஊடகங்கள் இன்று ஆட்சி மாற்றத்தை கூட கொண்டுவரும் சக்திகளாக மாறிப்போயுள்ளன. விஞ்ஞானம், சமையல், விவசாயம், முதலீட்டு ஆலோசனைகள், கேன்சருக்கான மருந்து (ஆமாங்க நம்புங்க), அரசியல், ஆபாசம் என எண்ணற்ற தலைப்புகளில் சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. 

இப்படி குறுகிய காலத்தில் விஸ்வரூப வளர்ச்சி கண்ட சமூக ஊடகங்களுடன் சில தீய செயல்களும் சேர்த்தே வளர்ந்துள்ளன. மத, இன, மொழி சார்த்த உணர்ச்சிகளை தூண்டும் வன்முறையான பல பதிவுகள் கூட சர்வசாதாரணமாக சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. காரணம் சமூக ஊடகங்களுக்கு சென்சார் கிடையாது. மனம்போன போக்கில் யாரும் யாரைப்பற்றியும் என்னவேண்டுமானாலும் ஆதாரமில்லாமல் எழுதலாம் என்ற நிலைதான் அதில்  நிலவுகிறது. 

இப்பொழுதெல்லாம் நாட்டில் எங்கேனும் கலவரம் வந்தால் முதலில் துண்டிக்கப்படுவது இணைய சேவைதான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் !

இப்படியான சக்திவாய்ந்த சமூக ஊடகங்களை இந்திய தேர்தல்களில் அறிமுகம் செய்தவர் நரேந்திர மோடிதான் ! 2014 தேர்தலில் மோடி பயன்படுத்திய அளவுக்கு எந்த கட்சியும் சமூக ஊடகத்தை பயன்படுத்தவில்லை என்பதே உண்மை. மோடியின் பிரமாண்ட வெற்றிக்கு சமூக ஊடக பிரச்சாரமும் ஒரு பெரிய காரணம்.

இன்று நிலைமை 2014 போல் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். மோடியின் வெற்றியை பார்த்து விழித்துக்கொண்ட கட்சிகள் சமூக ஊடக பிரச்சாரத்துக்கென்றே ஆட்களை பணியமர்த்தி பெரிய பட்ஜெடில் தயாராகியுள்ளன. தங்களின் திட்டங்களை/செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்தலை எல்லாம் தாண்டி தனிமனித வெறுப்பு, எதிர்தரப்பு தலைவர்களின் போட்டோகளை தவறாக சித்தரித்து வெளியிடுதல், வரலாற்று நிகழ்வுகளை திரித்து பதிவிடுதல் என கட்சிகள் பல வகைகளில் சமூக ஊடகங்களில் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. 

சமூக ஊடக பிரச்சாரத்தின் மூலம் கட்சிகள் கவர நினைப்பது பொதுவாக இளைஞர் ஓட்டுகளைத்தான் என்று பரவலாக கூறப்படுவதுண்டு.

ஆனால் சமீப காலமாக 40 வயதை கடந்தவர்களும் சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தங்களுக்கு வரும் செய்தி உண்மையா என்று உறுதிப்படுத்த இளைஞர்களுக்கு இருக்கும் வாய்ப்பு 40 வயதை கடந்தவர்களுக்கு கிடைப்பதில்லை. இதை கூட சில அரசியல் கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவாக நண்பர் ஒருமுறை குறிப்பிட்டார். குறிப்பிட்ட சில பதிவுகள் நம் பெற்றோர் வயதுடையவர்களை குறிவைத்து அனுப்பப்படுவதை சபரிமலை பிரச்சனையின் பொழுது நண்பர் சுட்டிக்காட்டினார்.

துபாயில் ராகுல் காந்தியை ஒரு சிறுமி கேள்வி கேட்டு திணறடித்ததாக சமீபத்தில் பரப்பப்பட்ட செய்தியும்,  #GoBackModi #TnWelcomeModi என்ற இரண்டு ஹாஷ்டேக்குகளும் இலட்சக்கணக்கான முறை ட்வீட் செய்யப்பட்டதும் கட்சிகளின் IT பிரிவினர் செய்யும் திட்டமிட்ட பிரச்சாரங்கள் என்பதை நாம் உணரவேண்டும். 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுமாதிரியான பிரச்சாரங்கள் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். எனவே மக்கள் தங்களுக்கு சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை அடுத்தவருக்கு பகிரும் முன் அவற்றை உறுதிப்படுத்த முனைய வேண்டும். உறுதிப்படுத்த நேரமோ, வாய்ப்போ கிடைக்காவிட்டால் அவற்றை மற்றவருடன் பகிராமல் இருப்பதே நல்லது.

ஒரு தூண்டுதலுக்கும் அதற்கான எதிர்வினைக்கும் நடுவே இருக்கும் இடைவெளியில் சற்றே நின்று சிந்திப்போம், செயல்படுவோம் என்று எழுத்தாளர் திரு. சுதாகர் கஸ்தூரி ஒரு முறை குறிப்பிட்டார். அதுவே சமூக ஊடகங்களின் வரும் தவறான பிரச்சாரங்களை எதிர்கொள்ள  நம்மை போன்ற சாதாரண மக்களுக்கு இருக்கும் ஒரே வழியாகும்  ! 

முன்னெப்பொழுதும் நடத்த தேர்தல்களை விடவும் 2019 தேர்தல் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது !காத்திருப்போம் விழிப்போடு  !

Comments

Popular posts from this blog

Download Tamil books free in PDF format - Project Madurai

அப்பாடக்கர் - உண்மையான அர்த்தம் (Meaning of Appatakkar)

சங்கதாரா புத்தக விமர்சனம்

அவளும் ! நானும் ! நீங்களும் !

எது உண்மையான வாதாபி கணபதி ? (பகுதி 1)