இனி டீசல் கார்கள் விற்பனை செய்வதில்லை - மாருதி துணிச்சல் முடிவு
இந்தியாவில் அதிக கார்களை விற்கும் மாருதி நிறுவனம் ஏப்ரல் 1, 2020 முதல் டீசல் கார்களை விற்பதில்லை என அறிவித்துள்ளது. BS-VI எனப்படும் மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் அடுத்த ஏப்ரல் 1 முதல் அமலில் வரவுள்ளன. ஏற்கனவே மாருதி வசம் இருக்கும் டீசல் என்ஜின்களை BS-VI விதிமுறைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க அதிக செலவு பிடிக்கும் என மாருதி கருதுகிறது. மாருதியின் மொத்த கார் விற்பனையில் 23% டீசல் கார்கள் என்பதை கொண்டே மாருதி எடுத்திருக்கும் முடிவின் வீரியத்தை புரிந்துகொள்ளலாம். பெட்ரோல் மற்றும் டீசல் இடையே விலை வேறுபாடு பெரிய அளவில் இல்லாததால் டீசல் கார்களை விரும்புபவர்கள் பெட்ரோல் காருக்கு மாறுவார்கள் என மாருதி நம்பியிருக்கலாம். வரும் ஆண்டுகளில் CNG மற்றும் எலெட்ரிக் கார்கள் விற்பனையில் மாருதி கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது